Monday, June 21, 2010

கல்லூரி மாணவர்கள் பாலக்காட்டில் ஊர்வலம்

பாலக்காடு: உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை முன்னிட்டு பாலக்காட்டில் கல்லூரி மாணவர்கள் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.
 கோவையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நாளை(23ம் தேதி) முதல் 27 ம்தேதி வரை நடக்கிறது. இம்மாநாட்டையொட்டி கோவை ஏ.ஜெ.கே., கல்லூரி சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் பாலக்காட்டில் நேற்று நடைபெற்றது.
பாலக்காடு கோட்டை மைதானத்தில் தமிழக சுற்றுலா மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுரேஷ் ராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார். சிவில் ஸ்டேஷனிலிருந்து துவங்கிய ஊர்வலம் கோட்டை மைதானம், மாவட்ட மருத்துவமனை, கோர்ட் ரோடு, சுல்தான்பேட்டை சந்திப்பு, தாரைக்காடு, கல்லூரி சாலை வழியாக அரசு விக்டோரியா கல்லூரி சென்று நிறைவுபெற்றது.
கல்லூரி நிர்வாக செயலாளர் அஜித்குமார் லால்மோகன், கல்லூரி முதல்வர் பாலசுப்ரமணியம் ஆகியோர் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தனர். விழிப்புணர்வு ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
 உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நிகழ்ச்சிநிரல் விபரங்கள அடங்கிய துண்டு பிரசுரங்களை மாணவர்கள் பொதுமக்களுக்கு வினியோகித்தனர். கேரள மாநில தமிழ் வளர்ச்சிப்பணி இயக்க தலைவர் விக்டர் சார்லி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment