Monday, June 21, 2010

உலகெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்

உலகெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம்: தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

First Published : 22 Jun 2010 02:54:09 AM IST


கோவை, ஜூன் 21: உலகெலாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வோம் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.  கோவையில் திங்கள்கிழமை நடைபெற்ற "தினமணி- செம்மொழிக் கோவை' மலர் வெளியீட்டு விழாவில் அவர் ஆற்றிய ஏற்புரை:  "தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்று தினமணி குரல் கொடுத்த அதே நாளில், மாவட்ட ஆட்சியர்களின் மாநாட்டில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. தினமணியும், முதல்வரும் ஒரே நேரத்தில் கருதியது  உவகை, உவகை, உவகை.  இன்று தமிழனும், தமிழ் இனமும் பின்னடைவு அடைந்திருக்கும் நேரத்தில் இந்த மாநாடு தேவை தானா? இத்தனை பொருள் செலவு செய்து மாநாடு தேவையா? இதற்கு அரசியல் காரணம் உள்ளதா? என்றெல்லாம் கேட்கிறார்கள். ÷இப்போது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள்- தமிழ், தமிழ் என்று கடந்த இரண்டு மாத காலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் ஐந்தாண்டுகளுக்குப் பேசுவார்கள். அதற்காக எத்தனை கோடி செலவானாலும் பரவாயில்லை.   நாராயணா, நமசிவாயா, யேசுநாதர், அல்லா இவர்களையெல்லாம் ஏன் மீண்டும் மீண்டும் அழைக்கிறோம். தொடர்ந்து சொல்லாவிட்டால் தெரியாதா என்ன? அதைப் போலத்தான் தமிழ், தமிழ் என்று, தமிழர்கள் தனித்தனியாகவும், ஒன்றுகூடியும் மீண்டும் மீண்டும் உரக்கச் சொல்வதில் தவறில்லை. ÷இந்த மாநாட்டில் தினமணிக்கு என்ன பங்கு? என்று நினைத்தபோது உருவானதுதான் "செம்மொழிக் கோவை'. ஒரு காலப் பொக்கிஷமாக, 2010-ம் ஆண்டில் வாழ்ந்த தமிழறிஞர்கள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்பதைப் பதிவு செய்யும் ஆவணமாக இது உருவாகியிருக்கிறது.  ஆங்கில மோகத்தால் இன்றைய குழந்தைகள் தமிழ் தெரியாமல் வளர்கிறார்களே என்கிற தமிழ் குறித்த எனது வேதனைக்கு அடிப்படைக் காரணம், அய்யோ இப்படி ஆகிவிட்டதே என்பதல்ல; நம் குழந்தைகளின் பெற்றோர் இப்படி ஆகிவிட்டனரே? என்பதுதான். இப்போதுள்ள நிலைக்குக் காரணம் பெற்றோர்தான்.  தமிழ் படித்தால் வேலைக்குச் செல்ல முடியுமா? என்று கேட்கின்றனர். ஆங்கிலத்தைப் படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. வேலைக்குப் போக வேண்டாம் என்று சொல்லவில்லை. நமக்குள்ளே பேசுவது தமிழாக இருக்கட்டுமே என்றுதான் கேட்டுக் கொள்கிறேன்.÷தமிழ் மொழிச் சிதைவுக்கு யார் காரணம்? "டியூப் லைட்'டுக்கு தமிழில் என்ன பெயர்? என்று கேட்கின்ற பண்பலைத் தொடர்பாளர் ஒருவர், விடையை இந்த "நம்பரில்' சொல்லுங்கள் என்று கூறுகிறார். இது என்ன கொடுமை?÷எத்தனை மொழி படிக்க முடியுமோ அத்தனை மொழிகளையும் படியுங்கள். பாரதிக்குப் பல மொழிகள் தெரிந்ததால்தான், யாமறிந்த மொழிகளிலே இனிதான மொழி தமிழ் என்றான். படிக்காமலேயே இனிய மொழி என்று சொல்ல முடியுமா? ஆங்கிலத்தையும் முறையாகப் படிக்காமல், தமிழையும் முறையாகப் படிக்காமல் இருப்பதைத்தான் தவறு என்று சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.  தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கச் செய்ய வேண்டும். நம் வீட்டில், நமக்குள் - நல்ல தமிழில் பேசுவோம். ஒரு மொழி வழக்கொழிந்து விட்டால், அந்த மொழி அழிந்து விடும். இதுதொடருமானால், 200 ஆண்டுகளுக்குப் பிறகு நமது வாரிசுகள், நம்மைக் கொடுங்கோலர்கள், மாபாதகர்கள் என்று சபிப்பார்கள்.  பெற்றோரை "மம்மி, டாடி' என்று  அழைப்பதைக் கேவலம் என்று உணர வேண்டும். குழந்தைகளுக்கு குறைந்தது 50 திருக்குறள்களையாவது சொல்லிக் கொடுங்கள்.   உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறப்பாக நடந்து வரும் இந்த வேளையில், உலகெலாம் தமிழ் முழக்கம் கேட்கட்டும். சொல்லில் உயர்வு தமிழ்ச்சொல்லே என்பதை ஒவ்வொரு தமிழனும் உணர்ந்து நெஞ்சு நிமிர்த்திப் பெருமிதம் கொள்ளட்டும்' என்றார் வைத்தியநாதன்."செம்மொழிக் கோவை' மலரின் சிறப்பு அம்சமாக நான் கருதுவது இரண்டு விஷயங்களை. முதலாவது, முதல்வருக்கு நாங்கள் கடிதம் அனுப்பிய மூன்று நாள்களுக்குள் எங்களுக்கு கட்டுரையை அவர் அனுப்பித் தந்து "செம்மொழிக் கோவையை' சிறப்பித்தது.   இரண்டாவது, "தினமலர்' ஆசிரியரும், நாணயவியலில் தமிழகத்தின் தலைசிறந்த ஆய்வாளருமான இரா.கிருஷ்ணமூர்த்தியிடம், எங்களுக்கு கட்டுரை வேண்டும் என்று கேட்ட சில மணித் துளிகளில் கட்டுரையை அவர் அனுப்பித் தந்து "செம்மொழிக் கோவையை' சிறப்பித்தது. இதற்கு நன்றி கூறாமல் போனால் நாங்கள் செய்நன்றி கொன்றவர்கள் ஆகிவிடுவோம்.  என்னைப் பொருத்தவரை "செம்மொழிக் கோவை' மலரின் தனித்துவமும், சிறப்பும், முதல்வரின் கட்டுரையும், தினமலர் ஆசிரியர் இரா.கிருஷ்ணமூர்த்தியின் (படம்) கட்டுரையும்தான்.'

No comments:

Post a Comment