Friday, July 16, 2010

இந்திய ரூபாய் குறியீடு தமிழகத்துக்குப் பெருமைசேர்த்துள்ளார் டி.​ உதயகுமார்



First Published : 17 Jul 2010 12:00:00 AM IST

Last Updated : 17 Jul 2010 05:57:36 AM IST
புது தில்லி,​​ ஜூலை 16:​ இந்திய ரூபாய் குறியீடு வடிவமைத்ததன் மூலம் தமிழகத்துக்குப் பெருமை சேர்த்துள்ளார் டி.​ உதயகுமார்.​ ​சர்வதேச அளவில் இந்திய நாணயத்துக்குப் பெருமை சேர்க்கும் வகையில் குறியீடு அமைய வேண்டும் என்றும் உரிய டிசைனை அனுப்பலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது.​ சுமார் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வடிவமைப்பை அனுப்பியிருந்தனர்.​ இதில் 5 வடிவங்களை ரிசர்வ் வங்கி துணை கவர்னர் உஷா தோரட் தலைமையிலான குழு தேர்வு செய்தது.​ இதில் உதயகுமார் அனுப்பிய வடிவமைப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது.​ இதற்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.​ ​திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த உதயகுமார் இப்போது குவாஹாட்டியில் உள்ள ஐஐடி-யில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.​ வடிவமைப்பு சார்ந்த படிப்பு முதல் முறையாக இந்த ஐஐடி-யில்தான் தொடங்கப்பட்டது.​ அண்ணா பல்கலைக் கழகத்தில் பொறியியலில் வடிவமைப்பு பிரிவில் பட்டம் பெற்ற ​ மும்பை ஐஐடி-யின் முன்னாள் மாணவராவார்.​ ​ஓராண்டுக்கு முன்பு இந்த வடிவமைப்பை உருவாக்கி அளித்ததாகவும்,​​ இப்போது தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி ததும்பக் குறிப்பிடுகிறார் உதயகுமார்.​ இந்த வடிவமைப்பின் மூலம் இவருக்கு பெரும் புகழும் ரூ.​ 2.5 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்துள்ளது.இவர் தமிழ் எழுத்து வடிவ வளர்ச்சி குறித்த ஆராய்ச்சி ​(பிஹெச்டி)​ கட்டுரையையும் தாக்கல் செய்துள்ளார்.​ இந்தக் கட்டுரையும் இவருக்குப் புகழைத் தேடித் தரும் என உறுதியாக நம்புகிறார் இவரது தந்தை தர்மலிங்கம்.​ இவர் ரிஷிவந்தியம் தொகுதியின் திமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினராவார்.சர்வதேச அளவில் இனி இந்திய ரூபாய் என்றாலே எல்லோருக்கும் நினைவில் வரக்கூடிய இந்த வடிவமைப்பை ஒரு தமிழர் உருவாக்கியிருப்பது தமிழ்நாட்டுக்கே பெருமை சேர்ப்பதாகும்.​ குறியீடு வடிவமைப்பில் இறுதிச் சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்ட மற்ற நான்கு பேருக்கும் தலா ரூ.​ 25 ஆயிரம் ஆறுதல் பரிசு அளிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.குறியீடு பெற்றதன் மூலம் அமெரிக்காவின் டாலர்,​​ பிரிட்டனின் பவுண்ட்,​​ ஜப்பானின் யென் மற்றும் ஐரோப்பாவின் யூரோ கரன்சிகளுக்கு அடுத்தபடியாக இந்திய ரூபாயும் இடம்பெறும்.

1 comment: