Sunday, October 17, 2010

மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை: முதல்வர் கருணாநிதி

தமிழகம்
மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை: முதல்வர் கருணாநிதி

First Published : 18 Oct 2010 12:00:00 AM IST

Last Updated : 18 Oct 2010 01:43:49 AM IST

மாமல்லபுரம் அருகே பட்டிபுலத்தில் பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் சிற்பங்கள் செதுக்கும் பணிகளுக்கான உளியை வழங்குகிறார் தமிழக முதல்வர் மு.கருணாநிதி.
காஞ்சிபுரம், அக். 17: மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்டது நடனக்கலை. நம் கலாசாரத்துடன் அக் கலையை வளர்க்க எடுக்கும் முயற்சிகள் பாராட்டப்பட வேண்டியவை என தமிழக முதல்வர் மு.கருணாநிதி பேசினார்.  ÷மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் கிராமத்தில் பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையத்தின் கட்டுமானப் பணிகள் மற்றும் சிற்பங்கள் செதுக்கும் பணிகள் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ÷பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் கருணாநிதி பேசியது:  ÷எனது நண்பரும், விடுதலைப் போராட்ட வீரருமான சுப்பிரமணியத்தின் மகன் பத்மா சுப்பிரமணியன், இந்த அறக்கட்டளையை நிறுவி உள்ளார். இந்த இடத்தில் "பரதமுனி நாட்டியாலயம்' என்பதை உருவாக்க ஜெயலலிதா ஆட்சியில் ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.  ÷தமிழ் கலாசாரப் பெருமையை நாங்கள் என்றைக்கும் விட்டுக் கொடுத்தது கிடையாது. இச் சூழ்நிலையில் எங்கள் ஆட்சி வந்தவுடன் அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டதால் நீதிமன்றம் சென்றார் பத்மா சுப்பிரமணியன்.  ÷நான் அவரிடம், "நீதிமன்ற வழக்கு தேவையில்லை. நாம் சமாதானமாக சென்று விடுவோம். நீங்கள் பரதமுனி பெயருடன் இளங்கோவடிகள் பெயரை சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றேன்.  ÷அவரும் "பரதர்-இளங்கோ ஆசிய கலாசார மையம்' என்ற பெயரில் அறக்கட்டளையை பதிவு செய்துள்ளார்.  ÷நாட்டியம் என்பது மொழிகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு கலை. அக் கலையை வளர்க்கும் முயற்சிக்கு நானும் ஒரு கலைஞன் என்ற முறையில் ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். எங்கள் அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்கும்.  ÷நானும், பத்மா சுப்பிரமணியமும் கலைக் குடும்பம் என்ற வகையில் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவர்கள். அவர் வெளிநாடுகளில் நாட்டிய நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். ÷அவர் தொடங்கியுள்ள இந்த ஆராய்ச்சி மையம் உலக அளவில் சிறந்து விளங்கி நாட்டியக் கலையை வளர்க்கும் என்று நம்புகிறேன் என்றார் முதல்வர் கருணாநிதி.  ÷மாநிலங்களவை உறுப்பினர் க.கனிமொழி: இந்த ஆராய்ச்சி மையத்தில் பரத நாட்டியம் மட்டும் இல்லாமல் கிராமப்புறக் கலைகளையும் வளர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  ÷மேலும் இம் மையம் பல்வேறு நாடுகளின் கலாசார வடிவிலான கட்டடங்களுடன் பல கோடி செலவில் அமைக்கப்படுகிறது. நடனமாடும் சிவன் போன்ற சிலைகள் 108 நிறுவப்பட உள்ளன.  ÷இளங்கோவடிகள் பெயரில் அரங்கம் அமைக்கப்பட உள்ளது என்றார் கனிமொழி.  ÷இந் நிகழ்ச்சியில் நிர்வாக அறங்காவலரும் நாட்டிய கலைஞருமான பத்மா சுப்பிரமணியம் வரவேற்றார். தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.  ÷முதல்வரின் மனைவி ராஜாத்தி அம்மாள், மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, மாநில அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பெ.விஸ்வநாதன், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆசிஷ் சாட்டர்ஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

No comments:

Post a Comment