Wednesday, October 27, 2010

புதிய முறையால் சிவில் சர்வீசஸ் தேர்வில் கிராம மாணவர்களின் தேர்ச்சி குறையும் அபாயம்

"சிவில் சர்வீசஸ் தேர்வு' முறையில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம், தமிழ் மீடியத்தில் படிக்கும் கிராமப்புற மாணவர்களின் தேர்ச்சியை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது. தமிழக மாணவர்களின் தேர்ச்சியை உறுதிப்படுத்த, கல்வி நிறுவனங்கள் தயார்படுத்த வேண்டுமென ஆலோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் "சிவில் சர்வீசஸ் தேர்வு' முறையில் சில மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. மூன்று கட்டமாக நடக்கும் இத்தேர்வில், முதல் கட்டமான "பிரிலிமினரி' (ஆரம்ப தேர்வு) தேர்வில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக இருந்து வந்த விருப்ப பாட முறை அகற்றப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக "ஆப்டிடியூட்' எனப்படும் திறன் சோதனைக்கான தாள் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனி ஆரம்ப தேர்வில் பொது அறிவு (200 மதிப்பெண்), திறன் தாள்(200 மதிப்பெண்) ஆகிய இரண்டு தாள்கள் இடம்பெறும். பொது அறிவுத்தாளில் இந்திய வரலாறு, புவியியல், சர்வதேச அரசியல் உறவுகள் போன்றவை இடம் பெறும். பருவநிலை மாற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இரண்டாம் தாள் முற்றிலும் புதிதானது. ஆங்கிலத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்கள், இத்தேர்வில் வெற்றி பெற திணறும் நிலை உருவாகியுள்ளது. இரண்டாம் தாளில், மேலாண்மை படிப்பு நுழைவுத் தேர்வின் தன்மைகள் இடம் பெற்றுள்ளன. வங்கித் தேர்வு, மேலாண்மை, மத்திய கீழ்நிலை பணியாளர் தேர்வுகளின் தன்மைகளும் உள் ளன. இதைத்தவிர, சிவில் சர்வீசஸ் தேர்வின் இரண்டாம் மற்றும் இறுதி கட்டங்களில் தற்போது எந்த மாற்றமும் இல்லை.

புதிய மாற்றங்களின் சாதக, பாதகங்கள் குறித்து, கோவை உயர்கல்வி மையத்தின் தலைவரும், அரசு கலைக் கல்லூரி பேராசிரியருமான கனகராஜ் கூறியதாவது: அனைவருக்கும் பொதுவான தேர்வுத்தாள்கள் கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது. இதுவரை மாணவர்கள் பல்வேறு விருப்ப பாடங்களை எடுத்து எழுதியதால், பல குழப்பங்கள் இருந்தன. விருப்ப பாடமுறை நீக்கப் பட்டுள்ளதால் இனி அந்த குழப்பங்கள் வராது. ஆரம்ப கட்ட தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் இதுவரை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை. புதிய மாற்றத்தால் இனி, மதிப்பெண்களை வெளியிட முடியும். ஒளிவு மறைவு இல்லாமல் நாடு முழுவதும் இனி ஒரே ரேங்க் பட்டியலை வெளியிட முடியும். புதிதாக ஏற்படுத்தப் பட்டுள்ள மாற்றம், கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். பழைய முறையில், ஆங்கில புலமைக்கு முக்கியத்துவம் இல்லாமல் இருந்தது. தற்போதைய முறையில் இரண்டாம் தாளில் ஆங்கில புலமைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆங்கிலம் நன்கு படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. தமிழ் மீடியத்தில் படித்த மாணவர்களுக்கு இந்த மாற்றம் சிரமத்தை தரும். கிராமப்புற மாணவர்களுக்கும், தமிழ் மீடியத்தில் படிக்கும் மாணவர்களுக்கும் நல்ல ஆங்கில பயிற்சி அளித்தால் இந்த சிக்கலை சமாளிக்க முடியும். இவ்வாறு, பேராசிரியர் கனகராஜ் தெரிவித்தார்.

"சவாலை சமாளிக்கலாம்': பேராசிரியர் கனகராஜ் கூறுகையில், ""கடந்த பல ஆண்டுகளாக தமிழகத்தில் இருந்து சிவல் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. ஆனால், புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றங்கள், தமிழக மாணவர்களுக்கு புதிய சவால்களாக உருவெடுத்துள்ளன. கல்வியாளர்களும் கல்வி நிறுவனங்களும் இப்புதிய சவால்களை வெற்றி கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். மாற்றங்கள் மூலம் வரும் எந்த சவாலையும், கடின உழைப்பின் மூலம் வெற்றி கொள்ள முடியும்,'' என்றார்.

                                                                                                                          - நமது நிருபர் -

No comments:

Post a Comment