Wednesday, December 1, 2010

ஆன்-லைன் மூலம் மின்கட்டணம்: தமிழகம் முழுவதும் அறிமுகம்

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள மின் நுகர்வோர், ஆன்-லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வகையில், விரிவுபடுத்தப்பட்ட சேவையை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று துவக்கி வைத்தார். தமிழகத்தில், இரண்டு கோடியே 10 லட்சம் தாழ்வழுத்த மின் நுகர்வோரும், 7,502 உயர் அழுத்த மின் நுகர்வோரும் உள்ளனர். கட்டணங்களை செலுத்த 2,711 வசூல் மையங்கள் செயல்படுகின்றன. தற்போது 15 நாட்கள் மின் கணக்கீடு, 15 நாட்கள் வசூல் என்ற முறை நடைமுறையில் உள்ளது.

வசூல் மையங்கள் பரவலாக இருந்த போதிலும், இறுதி நேரத்தில் மின்கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர் அதிகமாக இருப்பதால், நீண்ட வரிசையில் நின்று கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. இதை தவிர்க்கும் வகையில் சென்னை, கோவை மண்டலத்தில், ஆன்-லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாழ்வழுத்த மின் நுகர்வோரும், ஆன்-லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தும் வசதியை, மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி நேற்று துவக்கி வைத்தார். எரிசக்தித்துறை செயலர் டேவிதார், மின்வாரிய தலைவர் சி.பி.சிங் உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி அளித்த பேட்டி: மாநிலம் முழுவதும் உள்ள தாழ்வழுத்த மின் இணைப்பு பெற்றுள்ள நுகர்வோர், "இன்டர்நெட்' மூலம் மின் கட்டணம் செலுத்தும் வகையில், மூன்று கோடி ரூபாய் செலவில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது. தற்போது 3 சதவீதம் பேர், "இன்டர்நெட்' மூலம் மின் கட்டணம் செலுத்துகின்றனர். இனிவரும் காலங்களில் இது அதிகரிக்கும்.

உயர் மின் அழுத்த மின்நுகர்வோருக்கு நடைமுறையில் உள்ள மின்னணு கணக்கு சேவை (இ.சி.எஸ்.,) மூலம், மின் கட்டணம் செலுத்தும் வசதி மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. எல்லா நேரமும் மின் கட்டணம் செலுத்தும் இயந்திர வசதி சென்னையில் மூன்று இடங்களில் நடைமுறையில் உள்ளது. இவ்வசதியை கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் விரிவுபடுத்த ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி இருக்கும்போதெல்லாம் 99 சதவீத மின் கட்டணம் வசூல் நடந்து வருகிறது. தபால் நிலையங்கள் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி தமிழகம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். விவசாயிகளுக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு லட்சம் மின் இணைப்புகள், ஓராண்டுக்குள் வழங்கப்படும். இதற்காக கூடுதலாக 750 மெகாவாட் மின்சாரம் தேவை. இதை பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

No comments:

Post a Comment