Monday, December 6, 2010

கல்வி நிறுவன விளம்பரங்களுக்கு அதிரடி கட்டுப்பாடு

07-12-2010
புதுடில்லி: மாணவர்களைக் கவருவதற்காக, உண்மைக்குப் புறம்பாக விளம்பரங்களை வெளியிடும் கல்வி நிறுவனங்களுக்கு, இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில் அதிரடி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கல்வி அல்லது பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் அறிவிக்கும் விளம்பரங்களில் என்னென்ன அம்சங்கள் இடம்பெற வேண்டும், எவை இடம் பெறக்கூடாது என்பது வழிகாட்டுதல்களில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. உண்மைக்கு மாறான அல்லது மிகைப்படுத்தப்பட்ட விளம்பரங்களைப் பார்த்து, பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டு வெளியிடப்பட்டுள்ள இந்த விதிமுறைகள், பல்கலைகள், கல்லூரிகள், பள்ளிகள், சிறப்பு பயிற்சி நிலையங்களுக்கு பொருந்தும். இந்த அமைப்பு, தேசிய அளவில் உறுப்பு வகிக்கும் விளம்பர நிறுவனங்களை ஒழுங்குமுறை செய்யும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.

விதிமுறைகள்:

கல்வி நிறுவனம் வழங்கும் படிப்பு அங்கீகாரம், தர நிர்ணயம் பெற்றதற்கான மற்றும் சட்டப்பூர்வமானது என்பதற்கான ஆதாரங்கள் இல்லாமல் விளம்பரம் செய்யக்கூடாது. கல்வி நிறுவனம் வழங்கும் குறிப்பிட்ட பட்டம், டிப்ளமோ அல்லது சான்றிதழ் போன்றவை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது என்று விளம்பரம் செய்யப்பட்டிருந்தால், அந்த சட்டப்பூர்வ அமைப்பை பற்றி குறிப்பிட்டிருக்க வேண்டும்.

விளம்பரம் செய்யும் நிறுவனம் அங்கீகாரம் பெறாமல், அந்நிறுவனம் இன்னொரு நிறுவனத்துடன் இணைக்கப்பட்டிருந்தால், அந்த நிறுவனத்தின் சட்டப்பூர்வ அங்கீகாரம் பற்றி விளம்பரத்தில் குறிப்பிட வேண்டும்.

மேலும், அந்நிறுவனத்தின் எழுத்துரு அளவானது, விளம்பரம் செய்யும் நிறுவனத்தின் எழுத்துரு அளவில் 50 சதவீதத்துக்கு குறையாமல் இருக்க வேண்டும்.  வானொலி அல்லது தொலைக்காட்சியில் விளம்பரம் செய்வதாக இருந்தாலும், இணைப்பு நிறுவனத்தின் பெயரை அவசியம் தெரிவிக்க வேண்டும்.

மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி என்ற வகையில் வெளியாகும் விளம்பரங்களில், அதற்கான தகுந்த ஆதாரங்களைச் சேர்க்க வேண்டும்.

பதவி உயர்வு, நிரந்த வேலை என்று வாக்குறுதி அளித்தால் அதற்கான ஆதாரங்களை அவ்விளம்பரத்தில் சேர்த்தே வெளியிட வேண்டும்.

கல்வி நிறுவனத்தில் பயின்ற மாணவர்கள், அவர்கள் மதிப்பெண்கள், புகழ் பெற்ற நிறுவனங்களில் பெற்ற வாய்ப்பு, அவர்கள் பெறும் சம்பளம் ஆகியவற்றை வெளியிட விரும்பினால், விளம்பரத்தில் குறிப்பிட வேண்டியவை: படித்து வெளியேறிய மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர் விவரம், நிறுவன பாடத்திட்டத்தின் தர நிலை, அந்நிறுவனத்தின் ஆசிரியர் எண்ணிக்கை மற்றும் அவர்களின் தகுதிகள், வெளிநாட்டு நிறுவனங்களுடனான இணைப்பு, கல்வி நிறுவன உள்கட்டமைப்பு போன்ற விவரங்களை, சமீபத்திய ஆண்டுகளின் விவரங்கள்.

விளம்பரத்தில் குறிப்பிடப்படும் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர், அந்த கல்வி நிறுவனத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனத்திலிருந்து படித்து வெளியேறி நல்ல பணியில் இருக்கும் மாணவர்களை பற்றி விளம்பரத்தில் குறிப்பிடும் போது, படித்து தேறி வெளியேறிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கையையும் குறிப்பிட வேண்டும்.

கல்வி நிறுவனம் பெற்ற சிறந்த தரநிலை மற்றும் அதன் பாடத்திட்டத்தின் சிறப்பு பற்றி குறிப்பிடும் போது, அந்த சிறப்பு வெளியிடப்பட்ட தேதி மற்றும் தர நிர்ணய நிறுவனத்தின் முழுப்பெயர் தெரிவிக்க வேண்டும்.

விளம்பரத்தில் காட்டப்படும் கல்வி நிறுவனத்தின் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பானது, உண்மையாக இருக்க வேண்டும் மற்றும் சிதைவுறாமலும் இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment